Tuesday, 27 November 2018

காட்டு யானைகள்


காட்டு யானைகள் மிகவும் அறிவுத்திறன் கொண்டவை..

வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும். 

ஆனால், காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது. 

அவைகளது புத்திசாலி தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம்:- 

வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களைச் சுற்றி, 'மெக்கர்' ன்னு சொல்லப்படும் மின்சாரவேலி போட்டிருப்பாங்க. 
சூரியஒளி மின்சார பேட்டரியில் இணைப்பு கொடுத்திருப்பார்கள்...
'கட் அவுட்' வெச்சு, சுழற்சி முறைல, 3 நொடிக்கு கரன்ட்சப்ளை இருக்கும், அடுத்த 5 நொடிக்கு சப்ளை வராது. 
லைன் சப்ளை வர்ற அந்த 3 நொடி மட்டும் மெல்லிசா, ஸ்ஸ்ஸ்... ன்னு ஒரு சத்தம்வரும். 

இப்போ, இந்த மெக்கர் லைன... காட்டு யானைகள் எப்படி டீல்பண்ணும் தெரியுமா ? 

முன்காலை தூக்கி தயாரா மெக்கர் போடப்பட்டிருக்குற இரும்பு போஸ்ட்டுக்கு முன்னாடி நிக்கும். கரன்ட் சப்ளை இருக்குற அந்த 3 நொடி ஸ்ஸ்ஸ்... சத்தத்த விட்டுட்டு, அந்த சத்தம் நிக்கும்போது சப்ளை வராத அந்த 5 நொடிய மட்டும் கரெக்ட்டா பயன்படுத்தி, போஸ்ட்டை ஒரே மிதிமிதிச்சு தாண்டி போயிடும். 

இல்லேன்னா... காய்ஞ்ச மரங்களை தூக்கி மெக்கர் மேலபோட்டு ஒடைச்சு, ஏறிமிதிச்சு தாண்டி போயிடும். வனத்துறை பல டெக்னாலஜிகளை கையாண்டும் கூட, காட்டு யானைங்க கிட்ட ஒன்னும் செல்லுபடியாகல. 

தோண்டி வெக்குற அகழியவெல்லாம் சர்வ சாதாரணமா மூடிட்டு, தாண்டி வந்துடும். 

ஓரளவுக்கு கை கொடுக்குறது... வேலியோர தேனி வளர்ப்பு & சுரைமுள் வேலி மட்டும்தான்.

காட்டு யானைகளுக்கு தலைமை தாங்குறது, வயதான பெண் யானைதான். கூட்டத்துல இருக்குற, ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு வேலைகளை ஒதுக்கி குடுக்கும். ஆபத்துன்னு... சின்ன பொறி தட்டினாலும், குட்டிங்கள பூரா நடுவுல விட்டு, அத்தனை பெண் யானைகளும் சுத்தி அரண்அமைச்சு நிக்கும். 

அதே போல அங்க இங்க ஓடுற குட்டிகளை, அடிச்சு மிரட்டி கூட்டத்துக்குள்ள கொண்டு வர வேண்டியது, கொஞ்சம் வளர்ந்த குட்டிகளோட வேலை 
(LKG பசங்கள கவனிக்கிற வேலைய, அஞ்சாம் கிளாஸ் பசங்களுக்கு குடுத்தா... நல்லா 'சட்டாம்புள்ள' வேல பாப்பாங்க. அது மாதிரி...). 

யானைகளோட 'டேஞ்சர் சோன்' 30 மீட்டர்.  மற்ற விலங்குகளோ, மனிதர்களோ அந்த எல்லைக்குள்ள வர்றத யானைகள் அனுமதிக்காது. 
உடனே ஏறிவந்து, "நெருங்கி வராத" ன்னு, மிகக் கடுமையான எச்சரிக்கை கொடுக்கும்.

யானைகள், உணவு தேடலுக்காக ஒருநாளைக்கு 30 to 50 கி.மீ நடக்கும். 

அப்படி போகும்போது... வனப்பகுதிகளில் போடப்பட்டிருக்கும், வாகன போக்குவரத்துகள் இருக்கும் சாலைகள கடக்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போ, சடார்ன்னு எல்லாமுமா ஓடிப்போய் ரோட்டை கடந்துடாது. 

முதல்ல ஒரேஒரு ‘செக்யூரிட்டி’ கொம்பன் மட்டும் காட்டைவிட்டு வெளியவந்து, ரோட்டில் நின்னு தும்பிக்கைய தூக்கி சத்தம்போட்டு , வாகனங்களுக்கு எச்சரிக்கை செஞ்சு நிறுத்தும். 

ரெண்டு பக்கமும் வாகனங்கள் நின்னு, அமைதியானவுடன்... தன் கூட்டத்தை பார்த்து ஒருசத்தம் மூலமா, "வரலாம் வா..." ன்னு, சிக்னல் கொடுக்கும். அதுக்கு அப்புறம்தான் ஒன்னொன்னா வெளியவரும். 

நாமதான் வரிசைல போகும்போது... தலைகள எண்ணினாக் கூட ரெண்டுமூணு பேர மறந்துடுவோம். ஆனா அது, ரோட்டை மட்டுமே ரெண்டு பக்கமும் பாத்துட்டு நிக்கும். ஆனா மிகச்சரியா... கடைசி யானை ரோட்டை தாண்டினதும், யோசிக்காம... சடார்னு அதுக்கு பின்னாடி போயிடும். 

அதே போல ஏதாவது ஒன்னு, வராம மிஸ்ஸானாலும் கூட, காட்டை பார்த்து சத்தம் குடுத்து, "ரெட் சிக்னல் விழப் போகுது. சீக்கிரமா வந்து தொல" ன்னு, அதட்டும். 

இந்த ரெண்டு பொறுப்பும், 'செக்யூரிட்டி கார்ட்ஸ்' ன்னு சொல்லப்படுற, ஓரளவுக்கு வளர்ந்த ஆண் யானைகள்ட்ட கொடுக்கப் பட்டிருக்கும்.

(ஒரு கட்டத்துக்கு மேல... முதல் மஸ்து நேரத்துல, வளர்ந்த கொம்பன்கள், தலைமை யானைக்கு கட்டுப்படாம... அடாவடி செய்ய ஆரம்பிக்கும். அப்போ, இந்த ஆண் யானைகள் கூட்டத்தவிட்டு, விலக்கப்படும். ஆனாலும், பாசத்துக்கு ஏங்கி... கிட்டத்தட்ட 48 நாட்கள் கூட்டத்த விட்டுப் போகாது. கூட்டம் எங்கெல்லாம் போகுதோ... இதுவும் கொஞ்சதூர இடைவெளில, பின் தொடர்ந்து போகும். கூட்டத்தின் மேலான பாசம் வடிஞ்சு, ஒரு கட்டத்துக்கு மேல பிரிஞ்சு போயிடும். இதுதான், ஆக்ரோஷமா சுத்துற ஒற்றை கொம்பன்கள்).

(கொம்பனை பற்றிய ஒரு கொசுறு தகவல்...

ஒரு கொம்பன் உங்கள விரட்டி பிடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா... நீங்க 'உசைன் போல்ட்' டாவே இருந்தாலும், தப்பிக்க முடியாது. 

உங்க வேகத்தை எட்டிப் பிடிக்க உங்களுக்கு 8 நொடிதேவை. 
ஆனா... யானை நாலே நொடில, உங்கள பிடிச்சிடும். 

அவ்ளோ பெரிய உருவம் உங்கள ஆக்ரோஷமா விரட்டுதுன்ற உணர்வே... உங்கள மிரட்டி, ஓடவிடாம செஞ்சுரும். 

அதனால, யானைங்க கிட்ட விளையாடாதீங்க. 

எல்லா யானைகளும் மனிதர்களை கொல்லாது. வெறும் மிரட்டல்தான். 

ஆனா... ஒற்றை தந்தத்துடனோ, தாறுமாறா வளர்ந்த தந்தத்தோடவோ, சூறை நாற்றத்துடன் சுத்துற யானையவோ கண்டா... தலை தெறிக்க ஓடிடுங்க. 
கொலைகார ராட்சஸன். 

இத்தனை வேலைகளையும் தலைமை பெண்யானை துல்லியமா கண்காணிச்சுட்டே இருக்கும். இதுல எங்க தடங்கல் ஏற்பட்டாலும், குறிப்பிட்ட அந்த பொறுப்புல இருக்குற யானைக்கு அதட்டல் விடுக்கும். 

சிலநேரம் அடிவிழும். 

யானைகளுக்கு புளிப்பு, உப்பு, மஞ்சள், சுண்ணாம்பு, எலும்புகளுக்கு தேவையான கால்ஸியம் சத்துக்கள் அவசியமானது. வளர்ப்பு யானைகளுக்கு அடிக்கடி உணவுல வெச்சு குடுப்பாங்க. 

ஆனா... காட்டு யானைகளுக்கு இயற்கைதான் வைத்தியன். 

புளிப்பு சத்துள்ள விளாம் பழங்கள், காட்டுப் புளி எங்க கிடைக்கும், சுண்ணாம்பு, உப்பு மண் எங்க கிடைக்கும், மஞ்சளுக்கு இணையான மூலிகை வேர்கள் எங்க கிடைக்கும், கால்சியத்துக்கு தேவையான நெல்லிக்காய் எங்க கிடைக்கும் ? 

(சில தாவரங்களின் விதைகள், மரத்திலிருந்து நேரடியா பூமில விழுந்தா முளைக்காது. அந்த பழங்களை யானை சாப்பிட்டு, அந்த விதைகள்... யானையின் வயிற்றில் சுரக்கும் ஒருவித திரவத்தில் நொதிக்கப்பட்டு, சாணத்தின் வழியா வெளில வந்தால் மட்டுமே உயிர்ப்புடன் முளைக்கும்) 

கோடை காலத்துல, வழக்கமான நீரோடைகள், குட்டைகள் வற்றி வறண்டபிறகு... மான், காட்டெருமை போன்ற மற்ற விலங்குகள் நீருக்கு அலைமோதி இறக்க ஆரம்பிக்கும். தப்பிப் பிழைத்த விலங்குகள் மட்டும்... நீருக்காக யானைகளை பின்தொடரும். யானைகள் பெருசா அலட்டிக்காது. தலைமை யானை தன்கூட்டத்த கூட்டிட்டு, அதுவரைக்கும் போகாத ஒரு திசையில பயணிக்கும். அங்க போய்... ஒரு குறிப்பிட்ட மணல் பாங்கான இடத்துல, காலால உதைச்சு தோண்டும். மற்ற யானைகளையும் தோண்ட சொல்லும். நாலஞ்சு அடில, தண்ணீர் ஊற்று பெருக்கெடுக்கும். வேண்டிய மட்டும் குடிக்கும். 

இதுபோல தன்னோட வழித்தடங்கள்ல, பத்துக்கும் மேற்பட்ட ரகசிய இடங்கள வெச்சிருக்கும். இந்த ரகசியங்கள்... தலைமை பெண் யானைக்கு மட்டுமே தெரியும். அதோட மூதாதையர்கள் அதுக்கு சொல்லி குடுத்திருக்கும். எத்தனை காலங்கள் ஆனாலும் மறக்காது.

அதேபோல யானையின் பிரசவ காலங்களில், வயிற்றுப்புண் ஆற... பல கி.மீட்டர்கள் பயணித்து, ஒருவித விசேஷமான புற்கள், தாவரங்களை உண்ணும். 

இதுவும் தலைமுறை தலைமுறையா சொல்லி கொடுக்கப் பட்டிருக்கும். 

வயது முதிர்ச்சியின் காரணமா, ஒரு கட்டத்திற்கு மேல, தலைமை பதவியை... திறமையான இன்னொரு வயதும், அனுபவமும் முதிர்ந்த பெண்யானைக்கு மாற்றிக் கொடுத்துடும். 

தானை தலைவரை போல... தான் ஈன்ற குட்டிக்கு மட்டுமே கொடுக்கணும்னு நினைக்காது. திறமையுள்ள யானைக்கு மட்டுமே கொடுக்கும். 

அப்படி தலைமை மாறினால், முன்பு தலைமை பதவியில் இருந்த யானைகூட, புதிய தலைவிக்கு கட்டுப்பட்டே நடக்கும்.

ரொம்ப வயசான, நோய்வாய்ப்பட்ட, நடக்க முடியாத, இனி வாழ்வது கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட யானைகள்... தன் கூட்டத்திடம் பிரியாவிடை பெற்று பிரிந்து, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போய், உணவு உண்ணாமல் இருந்து தற்கொலை செய்து கொள்ளும். 

பிரியும்போது... கூட்டத்தின் மொத்த யானைகளும் அந்த தற்கொலை செய்யப்போகும் யானையை சுற்றிநின்று அழும். 

ஆப்பிரிக்க யானை ஆராய்ச்சியாளர்கள், ஆப்ரிக்க கண்டம் முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில்... ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கான யானைகளின் எலும்புக் கூடுகளை கண்டு பிடித்தார்கள். 

இது தற்கொலைதான் என்று உறுதியாக சொல்கிறார்கள். 

ஆப்பிரிக்காவின் சமவெளிக் காடுகள் போல் அல்லாமல், ஆசிய யானைகளின் வாழ்விடங்கள், பெரும்பாலும் மலைக் காடுகளை சார்ந்தே இருப்பதால்... காசிரங்கா, வியட்நாம் போன்ற ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே, இதுபோன்ற யானைகளின் எலும்புக் கூடுகளை கண்டார்கள்.

இந்தியாவில்... யானைகளுக்கான பாரம்பரிய வலசை பாதைகள்  88 இருக்கிறது. 
(இப்போ பெரும்பாலும், அந்த பாதைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கு). 

ஆறுமாச குட்டியா, அந்த வலசை பாதைல அதோட அம்மாகூட நடந்துபோன யானைகுட்டி, 70 வயசானாலும் மறக்காம ஞாபகம் வெச்சிருக்கும்.

யானை என்னைக்குமே, அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படாது. அதேபோல தன்னோட பரம்பரை சொத்தை விட்டுக் கொடுக்காது. 

தன்னோட பரம்பரை சொத்தான வலசை பாதைகளை மீட்டெடுக்கவே, 'மனித - விலங்கு மோதல்' ன்ற, இவ்வளவு பெரிய போராட்டங்களை செய்யுது.

அதுங்கள நிம்மதியா வாழவிடுங்க !!!

நண்பன்

ராம் வந்திருப்பதாக மனைவி சொன்னாள்

வாசலில் ராம் காத்திருந்தான் , அடிக்கடி வந்து பணம் வாங்கிட்டு போவான்

"உள்ளே வாடா" 

"ஏதாவது சாப்பிட குடிக்க கொடு , குளிச்சுட்டு வரேன்" என்றேன் மனைவியிடம் 

எப்ப வந்தாலும் ஏதாவது சாப்பிட கொடுக்காமல் இவனை திருப்பி அனுப்புவதில்லை நான்

வேளா வேளைக்கு சரியாக சாப்பிட மாட்டான்

நிறைய தடவை வயித்தை காய போட்ருவான்

"அவன் எப்ப வந்தாலும் நா இல்லேன்டாலும் வெறும் வயித்தோடு திருப்பி அனுப்பாதே அவனை" என்பேன் மனைவியிடம் 

அவளும் என்ன இருக்கோ கொடுப்பாள் அவனும் எது கொடுத்தாலும் என் குழந்தைகளோடு ஜாலியா அரட்டை அடித்தபடியே சாப்பிட்டு போய்டுவான்

ராம் 20 வருட கால நண்பன் 

எந்த வேலையையும் ஒழுங்கா செய்ய மாட்டான் 

எந்த வேலையில் சேர்த்து விட்டாலும் ஆறே மாசத்துல ஏதாவது ஒரு சாக்கு சொல்லி நின்றுவான் 

காரணம் நியாயமாகத்தான் இருக்கும் 

ஊரில் வேறு யார் வீட்டுக்கும் போக மாட்டான்

வரும் போது என் குழந்தைகளுக்கு அவனால் முடிந்த ஏதாவது வாங்கி வருவான்

பல தடவை சத்தம் போட்ருக்கேன்

"ஒன்னை யார்ரா இதுலாம் வாங்கிட்டு வரச்சொன்னது" என்பேன்

"வேலைய பார்ரா" என்பான்

நேற்று கொஞ்சம் வேகமாக வந்தான். 

"கொஞ்சம் பத்து ரூபா அவசரமா வேணும்டா" என்றான் 

எப்போதும் அவன் காரணம் சொன்னதில்லை

பலமுறை நானும் கேட்டதில்லை

500,1000 தான் கேட்பான் இந்த ட்ரிப் அதிகம் கேட்கிறான்

"அவ்ளோ பணம் என்ட்ட இப்ப இல்லைடா"

"சரிடா அப்புறம் பாத்துக்கலாம்" ன்னு போய்ட்டான்

எனக்கு ஒரு மாதிரி உறுத்தலாகவே இருந்தது 

நாளைக்கு அவன் கேட்ட பணத்தை கொடுத்துடணும் 


மறுநாள் அய்யப்பேட்டை போகும் வேலை வந்தது 

அங்கு போன பிறகுதான் ரகு ஞாபகம் வந்துச்சி 

ராம் போல ரகுவும் நண்பன்தான்

ஒரே கிளாஸ் , ஒரே பெஞ்சு 

அவனை பார்த்துட்டு வரலாமே

ரகு பெரிய ஆளாய்ட்டான்

அரசியல்வாதி மாதிரி ஆய்ட்டான் 

மனைவியை அறிமுகப்படுத்தி வச்சான்

"அடிக்கடி ஓங்கள பத்தி சொல்லுவாரு" ன்னு அவன் மனைவி சொல்ல ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு

சாப்பிட்டு போக சொன்னான் 
சரியென ஒப்புக்கொண்டேன்

பெரிய வீடு 

நிறைய காசு பணம் புலங்குவதாக தோணுச்சு 

ராம் பணம் கேட்டானே இவன்கிட்ட கேட்போமா 
நட்புக்குள்ள என்ன ஒளிவு மறைவு 

"மாப்ளே ,, ஒரு அய்யாயிரம் இருந்தா கொடேன் ,, அடுத்த ட்ரிப் பார்க்கும்போது எப்படியாவது தரேன்" என்றேன்

"சாப்டு சாப்டு ,, தரேன்" என்றான் 

பத்தாக கேட்ருக்கலாமோ 

பரவால்ல இது போதும் 

நாம 5 போட்டு கொடுத்துடலாம்

எல்லாம் பேசினோம்

பண்ணெண்டாவது படிக்கும்போது விஷாலிக்காக நாங்க அடித்துக்கொண்டதை பேசி பயங்கரமா சத்தம்போட்டு சிரித்துக்கொண்டோம்

"படுத்து நாளைக்கு போயேன்டா" என்றான் 

"வேணாம் மாப்ளே , பரவால்ல ,, அடுத்த தடவை பாத்துக்கலாம்"
என்றேன் ,, 

" இல்லை லேட்டாயிடுச்சு பேசாம காலைலயே போ"

மறுநாள் 
ஒருவழியா புறப்பட இருந்தப்ப கையில் கொஞ்சம் பணம் வைத்து திணித்தான்

"வச்சுக்க இதை ,, பாத்துக்கலாம்" என்றான் 

எண்ணி பார்த்தேன் ஒரு ஆயிரம் இருந்தது 

"என்னடா இது ,, அஞ்சு கேட்டேன் ,, ஒண்ணு தந்துருக்கே" என்றேன்

"வச்சுக்க வச்சுக்க ,, பாத்துக்கலாம்" என்றான் 
வந்து விட்டேன்

அதை திருப்பி கொடுக்க தெரியலை 

ஆயிரம் ரூபா இல்லாம நா உங்கிட்ட வரலை ரகு ன்னு சொல்லி இருக்கலாம்

அந்த ஐயாயிரம் கூட டமால் ன்னு கேட்டது தான் 

பணம் வாங்க அவனை தேடி போகலை 

அவன் அளவுக்கு நானும் நல்லாதான் இருக்கேன்

ஆயிரம் இல்லாதவனாக என்னை நினைச்சுட்டானோ

திருப்பி கொடுத்தா அசிங்கமாய்டும்

பணத்துக்காகத்தான் வந்தீயா ன்னு நினைச்சிட்டான்னா

அய்யோ நான் எப்படி அவனுக்கு புரிய வைப்பேன்

இந்த ஒரு ஆயிரம் க்காக உன்னை தேடி வரலை ரகு 

ரகு வை விட எந்த விதத்திலும் நான் குறைந்தவனில்லை 

படிப்பிலும் சரி , பொருளாதாரத்திலும் சரி ,, நான் பணத்துக்காக ரொம்ப அலைகிறேன் என நினைச்சுட்டானோ

ஆயிரம் தருவான் என சத்தியமா எதிர்ப்பார்க்கலை


உன்னிடம் இருக்கும் பணத்தில் ராம் க்கு உதவலாம் நினைச்சேன் டு எப்படி இவனுக்கு உணர்த்துறது ?! இருக்கட்டும் 

இன்னொரு நாள் ராமை கூட்டி போய் வச்சுக்கலாம் கச்சேரி 

நண்பன் தானே 

ஊர் இறங்கியதும் ராம் வீட்டு வாசலில் செம கூட்டம் 

என்னாச்சு

"ஏதோ வயித்து வலியாம் , தாங்க முடியலை , டாக்டர் ட போக காசு இல்லை ,, ராத்திரி வலி தாங்க முடியாம தூக்கு போட்டுக்கிட்டார்" பொட்டிக்கடை ரஹீம் பாய் தான் சொன்னார் 

வேகவேகமாக வீட்டுக்கு போனேன் ,, உள்ளே இருந்து வந்த மனைவி சொன்னாள் 

"எவ்ளோ நேரம் , நேத்தே வருவீங்கன்னு நெனச்சேன் , நேத்து ராம் வந்திருந்தார் ,, நாள் பூரா வெயிட் பண்ணார் ,, பாவம் பணத்துக்காக வந்துருப்பார் போல ,, ரொம்ப நேரமாச்சு ,, நாளைக்கு வரேன்னு சோகமாத்தான் போனார்" என்றாள் ,,, 

" என்னங்க என்னாச்சு ஒங்களுக்கு ,, " மனைவி கத்த ,, வீடு கதற ,, பூமி இரண்டாக பிளந்து
என்னை இழுத்துக்கொள்வதாக உணர்ந்தேன் ! 


இவண் ;- அன்சாரி மஸ்தான் 

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...