Wednesday, 3 January 2018

முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் 

முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் (Dissolution of Muslim Marriage Act 1939)
*******************************************

1939ம் ஆண்டு முஸ்லிம் திருமண இழப்புச் சட்டம் (Dissolution of Muslim Marriage Act 1939) இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள காரணங்களைக் காட்டி முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து பெறலாம்.

1. நான்கு ஆண்டுகளுக்கோ அதற்கு மேற்பட்டோ கணவன் போன இடம் தெரியவில்லையயன்றாலும்

2. இரண்டு ஆண்டுகள் மனைவிக்கு குடும்பப் பராமரிப்பு செலவு கொடுக்க கணவன் தவறினாலும்

3. ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலோ மேல் முறையீடு செல்லும் உரிமையிழந்து கணவனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டாலும்

4. தகுந்த காரணம் இல்லாமல் மூன்று ஆண்டுகள் வரை கணவன் தன் கடமைகளை செய்யத் தவறினாலும்

5. கணவன் ஆண்மையற்ற தன்மை உடையவன் என்று நிரூபிக்கப்பட்டாலும்

6. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொழுநோய், பெண்சீக்கு நோய் ஆகியவை கணவனுக்கு இருந்தாலும்

7. பெண்ணுக்கு பருவ வயது எய்துவதற்கு முன்பெற்றோராலோ, காப்பாளராலோ திருமணம் செய்து வைக்கப்பட்டாலும் இச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள தவறுகளை கணவன் செய்தாலும் ஒரு பெண் விவாகரத்துப் பெறலாம்.

முஸ்லிம் சட்டப்படி கணவன் மதம் மாறினால் விவாகரத்து ஏற்பட்டுவிடுவது போல மனைவி இஸ்லாத்தை துறந்தாலும் திருமண முறிவு ஏற்பட்டு விடுகிறது.

 சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் U.M.அபுல் கலாம் முஸ்லிம் சட்டம் என்ற நூலின் 203ம் பக்கத்தில் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வழக்கின் தீர்ப்பைப் பற்றி குறிப்பிடுகிறார்.

பிற மதத் தம்பதிகளில் ஒருவர் முஸ்லிமாக மாறிவந்த மற்றவரை முஸ்லிமாக மாறும்படி அழைக்கவும் அதை அவர் மறுக்கவும் செய்த காரணத்தை மட்டிலும் வைத்து வேறு மத சட்டஅடிப்படையில் நடந்த திருமணத்தை முஸ்லிம் சட்ட விதிப்படி திருமண முறிவு செய்து கொள்ள உரிமைக் கோருவது இந்திய நாட்டுச் சட்டத்திற்கு ஒத்துவராது என்று கூறி நூர்ஜஹான் பேகம் வழக்கில் (Noorjahan Vs Enggene Tishence 1941 45 CWN 104) கூறப்பட்டுள்ள முடிவைப் பின்பற்றி ரொபஸ்ஸாகான் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

சரளா முத்கல் வழக்கில் (Sarala Mudgal Vs Union of India and others 1995 (3) SCC 635 – 1995 AIR SC 1531) இந்து கணவன் முஸ்லிம் மதத்திற்கு மாறிவந்தால் இந்து முறைப்படி நடந்த திருமணம் முறிந்து விடாது என்றும் இந்து திருமணச் சட்டத்தின்படி நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தை அச்சட்ட முறைப்படியே முறிக்க வேண்டும் என்றும், மதம் மாறி வந்து முஸ்லிம் முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் முந்தி திருமணம் ரத்தாகி விட்டது என்றும் கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்கு பிரிவு 494 இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மூன்று மாத காலமோ அல்லது மூன்று மாதவிடாய் காலமோ முடியும் வரை கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறலாம். இந்த காலம் முடிந்தவுடன் அவள் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளும் உரிமையைப் பெற்று விடுகிறாள். அதனால் தான் விவாகரத்திற்கு ஆளான முந்திய கணவனிடமிருந்து அவள் ஜீவனாம்சம் பெறுவதை இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்க வில்லை. என்றாலும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு தகப்பனின் கடமை. வயது அடைவது வரையில் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்தாக வேண்டும்.

1973ம் ஆண்டு குற்ற விசாரணை முறை சட்டம் மத்திய சட்டம் 2/1974ன் படி இச்சட்டத்தின் கீழ் 125 முதல் 128 வரை உள்ள பிரிவுகள் மனைவி, குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கு ஜீவனாம்சத்திற்கு வழிவகை செய்கின்றன. உடனடியாகவும், விரைவாகவும் நிவாரணம் கிடைக்க வழி செய்கிறது. இவ்விதித் துறைகள் சட்ட சிக்கல்களில் மூழ்காமல் குறுக்கு விசாரணை முறையில் (Summary Trails) முடிவுகட்ட வழி செய்கிறது. சிவில் வழக்கிலுள்ள நுட்பமும், திட்டமும், எதிர்ப்பும், மறுப்பும், விசாரணைகளும் குறுக்கு விசாரணைகளும் இங்கு உன்னிப்பாக பார்க்கப்பட வேண்டிய அவசியமில்லை. சிவில் வழக்கு மூலம் முடிவு கட்டப்பட்ட பின்னர் அத்தீர்ப்பைக் காண்பித்து இப்பிரிவின் கீழ் நிவாரணம் கேட்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் ஒரு வழக்கில் (Air 1968 Madras 79) தீர்ப்பளித்துள்ளது.

No comments:

Post a Comment

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...