Friday, 18 May 2018

ரமழான் மாதத்தின் சிறப்பு பாகம்-1

என் நண்பன் "ரமலான் னா என்னடா" னு கேட்டான், புரியுற மாதிரி சிம்பிளா பதிவாகவும் போட சொன்னான்.

ரமலான் னா பிரியாணி, பசி, பட்டினி அப்படி னு என்னவெல்லாம் கற்பனை பண்ணியிருந்தீங்களோ, எல்லாத்தையும் அழிச்சிருங்க.
"ரமலான்" ங்குறது ஒரு மாசத்துடைய பெயர் அவ்ளோதான்.
அந்த மாதத்தின் ஆரம்பத்தில் நோன்பு பிடிச்சு இறுதியில் நோன்பை முடிச்சு நோன்பு பெருநாளை கொண்டாடுவது தான் "ரமலான்"

சும்மா நோன்பு பிடித்து சாப்பிடாம, தண்ணி குடிக்காம பசித்து கெடக்குறதுல இறைவனுக்கு என்ன லாபம்...?
ஒரு லாபமும் கிடையாது, எந்த ஒரு நன்மைகளையும் செய்யாம வணக்க, வழிபாடுகள் இல்லாம வெறும் பசித்து மட்டும் இருப்பதை இறைவன் ஏற்றுக்கொள்ளவே மாட்டான். 

நோன்பு என்பது ரமலான்ல ஒரு பகுதி, அதாவது ஓட்டப்பந்தயத்துல shoe போட்டு ஓடுற மாதிரி, அதுதான் விதிமுறை, ஓடுவதற்கு சுலபமும் கூட.
அதேபோல தான் ரமலான்ல நோன்பும்.
ரமலானின்  முக்கிய நோக்கம் நன்மையான செயல்கள் செய்வது தான், அந்த செயல்கள் நோன்பு மூலம் பயணிக்கும்..

நம்மள மறந்து எந்த ஒரு தீமையான அனாவசியமான செயல்களை செய்ய முனையும்போதும் நோன்பினால் ஏற்பட்ட பசியும், உடல் சோர்வும் நோன்புல இருக்கோம்ங்குறதை நியாபகப்படுத்தும், அப்போவே அதை செய்யாம தவிர்த்திருவோம்.
ஒரு வேளை உணவு கூட கிடைக்காத ஏழை எளிய மக்களோட கஷ்ட்டத்தை உணர்ந்தாலே தன்னால உதவ மனம் வந்துரும். இந்த நோன்பின் மூலம் பசின்னா என்ன னு உணர முடியும்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பிராதன நோக்கம் இறையச்சமே, ரமலான் மாதத்தில் நிறைய நன்மைகள் செய்யனும், தீமையான காரியங்களில் இருந்து விலகிக்கொள்ளனும், அதிகமா இறைவனை தொழுகனும், முக்கியமா தான தர்மங்கள் அதிகமாக செய்யனும்.. எல்லா இஸ்லாமியனும் தன்னுடைய செல்வத்துல இருந்து 2.5% தானமா கொடுக்கனும். இந்த மாதத்தில் இறைவனுக்கும் நமக்குமான உறவு பலமடங்கு பலப்படும், ஸ்பெசல் மாதம் னு கூட சொல்லலாம், 
இந்த மாசத்துல தான் இறைவன் நபி(ஸல்) அவர்கள் மூலமா உலக மக்களுக்கு குர்ஆனை அருளினான்..

சரி shoe போடாம ஓட முடியாதா..? 
கண்டிப்பா ஓடலாம்.. ஆனால் எல்லோருக்கும் இல்லை.. ஏற்கனவே சொன்ன மாதிரி இது ஒரு விதிமுறை, அதில் சிலருக்கு விலக்கும் உண்டு.
நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் பெண்கள், குழந்தைக்கு பாலூட்டும் பெண்கள், இவங்களுக்கு லாம் விலக்கு உண்டு.. 
அவங்களாம் நோன்பின்றி நன்மையான காரியங்களை அதிகமாக செய்யலாம்..

இதுதான் Basic நோன்பும், ரமலானும்..

Thursday, 5 April 2018

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்

அஸ்ஸலாமு அழைக்கும்...............,

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார் -

உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.
சிறு வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.

1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.
உமர் முஃக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.


உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான… ” ஏன் இன்னும் லிபியா விழவில்லை “


படைத்தளபதி பயந்து கொண்டே ” சர், அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது”
முசோலினி ” யார் அவர்களை வழி நடத்துவது ?”

தளபதி: ” ஒமர் முக்தார் “

முசொலினி: “ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?!”

தளபதி: ” சர், அவர் ஒரு ஆசிரியர்…He is a teacher “ முசோலினி ஆச்சரியத்துடன் ” a teacher ?!!” பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே ” Even I was a teacher ” என்கிறான்.

பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய “ஓமர்-அல்-முக்தார்” பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த, பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா?

இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.

ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார். இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி, அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது).

சிறையில் சிறை அதிகாரி “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ” ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.

Wednesday, 7 March 2018

பேருந்து பயணம்

அலாரம் அடித்தவுடன் அவசர அவசரமாகக் குளிச்சிட்டு, இரு சக்கர வாகனத்தில் புது பஸ்டான்ட் நிலையத்தை அடைந்தபொழுது காலை 6மணி, பைக் ஸ்டான்டட்ல வண்டிய நிருத்திட்டு.. சார் சைட்லாக் பண்ணாதீங்கன்னு அங்க இருந்த ஆள் சவுண்ட் குடுக்கஅதன்படி வண்டிய போட்டுட்டு

6:20க்கு  கும்பகோணம் போகும் point to point அரசு பஸ்ல ஏறினேன். உள்ளே ஏறி நோட்டம் விட்டதில் ஒரு மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவிலே ஒரு இருக்கை காலியாக இருந்ததைக் கண்ட நான் அவசரமாக அதை நோக்கி நகர்ந்தேன், ஓரத்தில் அமர்ந்திருந்தவர் நடுவிற்கு நகர்ந்து எனக்கு ஓரத்தைத் தந்தார். பஸ் நிரம்பி வழிந்தது. பெண்கள் பட்டுப் புடவைகளிலும் ஆண்கள் ஜரிகை வேட்டிகளிலும் காட்சி தருவதிலிருந்து அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதும் வெல்லன முகூர்த்தம் என்பதும் தெளிவானது

நானும்  11மணிக்கு தஞ்சாவூரில் டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் என்பதால்தான் அவ்வளவு சீக்கிரம் பஸ்ஸைப் பிடிக்க ஓடி வந்தேன்
எப்பொழுதும் போனை நோண்டும் நான் இந்தமுறை அதை செய்யாமல் சற்று நோட்டம்விட்டேன் தெரிந்த முகம் ஏதாவதுள்ளதா என்று, ஆனால் தெரிந்தவர்கள் யாரும் இல்லை
நான் சுற்றுமுற்றும் பார்க்க என் இடது பக்கத்திலிருந்த இரண்டு பேர் அமரும் இருக்கையில் வாட்டசாட்டமாக ஒருவர் வெள்ளைக் கதர் சட்டை வேட்டியில் அமர்ந்திருந்தார். மோண்ட பனை மரம் போலிருந்தவரது வெள்ளை ஆடைகள் அவரின் நிறத்தைச் சற்றுத் தூக்கலாகக் காட்டியது. நல்ல வெளிச்சத்தில்தான் அவர் வைத்திருக்கும் பெரிய மீசை யாரையும் பயமுறுத்தும். விரைப்பாக முழு இருக்கையையும் அடைத்துக் கொள்வது போல் உட்கார்ந்திருந்தார். அருகே ஒரு வயதானவர் பல்லி போல் ஜன்னலோடு ஒட்டிக் கொண்டிருந்தார்.

இப்போழுதெல்லாம் பஸ்ஸில் பயணம் பண்ணுவது மிகவும் கடினம். ஓரே சத்தந்தான். அங்கங்கு கைபேசிகளில் பலர் சத்தமாக பேசி சிரித்து அழுது சண்டைப் போட்டு ஆரவாரிப்பார்கள். பொது இடம் என்ற நினைவே இல்லாமல் வீட்டையே தெருவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். போதாதற்கு பஸ்காரர்கள் பாட்டுக்களை வேறு சத்தமாக வைத்துவிடுவார்கள். நாற்பது வயது தாண்டும் பொழுது எவருக்கும் சரியாகக் காது கேட்காத நிலைக்கு தள்ளி விடுவார்கள் என்பது நிச்சயம்.

விசில் ஊதிக் கொண்டே பின்வாசல் வழியாக கண்டெக்டர் ஏற முன் வாசல் வழியாக பட்டுப் புடவையில் ஒரு நடுத்தரவயதுப் பெண் ஏறி டிரைவர் அருகே ஏதாவது இருக்கை இருக்கா என்று கண்களைச் சுழட்ட கண்டெக்டர் பின்னால் ஒரு இருக்கையில் இரு பெண்கள் மட்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணிடம்
பின்னால் வாருங்கள் அம்மா! இடமிருக்கிறதுஎன்றார்.

எனக்குப் பின்னாடி வேண்டாம்என்றது அந்த அம்மா..

அப்படியா! ஒன்று செய்யுங்கள். முன்னால் டிரைவரை எழுப்பிவிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள்என்றதும்..
எல்லோரும் கொல்லென்று சிரிக்க அந்தப் பெண் வெட்கி_கோபத்தோடு பஸ்ஸை விட்டு இறங்கப் பஸ் புறப்பட்டது

மிந்தின நாள் இரவு நல்ல மழை பெய்திருந்ததால் நல்ல குளிர். பஸ்ஸில் முக்கால்வாசி ஜன்னல்கள் கண்ணாடிகள் இழுத்துவிடப் பட்டு மூடப் பட்டிருந்தன
என் இடப்பக்கமிருந்த வயதானவரும் ஜன்னலைச் சாத்த முயற்சிக்க அந்தக் கதர் சட்டைக்காரர் காத்து வேணும் சாத்தக்கூடாது என்று தடுத்தார். வயதானவர் வாடைக் காற்று வீசுகிறது, குளிரும் அதிகமாக 
இருக்கிறது என்று சொல்ல, வேண்டுமானால் நான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொள்கிறேன் என்றார் கதர் சட்டை. வயதானவருக்கு தயக்கம். நான் பெரியவரிடம்இந்தப் பக்கம் வந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் சிரமமாக இருக்கும் என்றேன்வேறு வழியில்லாமல் இருக்கையில் உட்பக்கம் நகர்ந்து கிடைத்த கொஞ்ச இடத்தில் ஒட்டிக் கொண்டு வந்தார்.

பஸ் மாயுரம் பஸ்டேன்ட் வந்ததும் பலர் இறங்க முற்பட்டனர் எனது சீட்டில் உள்ளவர்களும் எழுந்து நகர்ந்தனர், அப்பொழுது நான் ஜன்னல் ஓரம் நகர்ந்தேன் திடீரென ஒரு கேரிபேக் வெளியில் இருந்து என் மேல் விழுந்தது, யாரோ இடம் பிடிப்பதற்காக அதை வீசி இருக்கலாம் என்றே உணர்ந்தேன். ஏம்பா இடம்பிடித்தது நான் அதில் நீ உக்காந்திருக்கிற என்று பையை போட்டவர் உரிமையுடன் கேட்க, இல்லை நான் இங்க ஏறவில்லை இதே பஸ்ஸிலதான் வர்ரேன் என்றேன், சாரி தம்பி மற்ற ஜன்னல் சாத்தி இருந்தது அதுக்குத்தான் இதில்போட்டேன் என்றபடி என் அருகே அமர்ந்தார்

காலேஜ், ஸ்கூல் பசங்கன்னு பஸ் பலபலவென்று நிரம்பி வழிந்தது, இடையில் இறங்குபவர்கள் ஏறாதீர்கள் என்று கன்டெக்டர் பலரை தடுத்தாலும்
இடையில் இறங்கும் மாணவர்களை அவர் ஏனோ தடுக்கவில்லை! அது அவர்மேல் ஓர் மரியாதையை கொண்டுசென்றது

கந்தலான கசங்கிய சீருடைகளில் 4 பள்ளி சிறுவர்கள், ஏனோ முனுமுனுத்து சிரித்து களாய்த்து அடுத்தநோடி என்னவாகும் என்ற எந்த கவலையுமின்றி அளாய்கடித்தனர். அவர்களின் சேட்டைகள் பஸ்ஸில் இருப்பவர்களை கவர்ந்தது!

ஆடுதுறையில் பாதிகூட்டம் இறங்க மீதி கூட்டம் ஏற.. அப்டியே நகர்ந்தது

பயணங்களில் ஏற்படும் தூக்கம் ஏனோ அனைவருக்கும் அதிகமாக வாய்பதில்லை, கண் அசந்த சற்று நிமிடங்களில் கும்பகோணம் பேருந்துநிலத்தை எட்டியது பஸ்

பல வண்ண-வர்ணங்களில் (தஞ்சாவூர்) புறப்பட தயாராக இருந்த தனியார் பேருந்தை நோக்கி நடந்தேன், சார் எங்கபோகனும் தஞ்சாவூரா என்ற நடத்துனரிடம் ஆமாம்! என்று தலைஅசப்பிற்க்கு முன்பே வண்டியில் ஏறி இருக்கையை காண்பித்தார்

பல இடங்கள் காலியாக இருந்தும் நமக்கான இடங்களை தேடிப்பிடித்து உட்காருவது சற்று குழப்பமாகவே அமையும், இருந்தும் சட்டென்று அமர்ந்து மீதம் உள்ள தூக்கத்தை தொடங்கவேண்டும் என்ற ஆசை, அதற்க்கு சற்றும் எதிர்பாராமல் இளையராஜா சாரும் வண்டியில் ஏறினார்
சில பாடல்கள் ஒருசிலருக்கு பலவித நியாபங்களை நினைவுபடுத்தும் அவ்வாறான பயணங்களுக்கு சிறந்த தோழன் இளையராஜா சார் பாடல் என்றால் அது மிகையாகாது.

மருத்துவமனையை அடைந்தேன் வியப்பூட்டும் பல அதிசய காட்சிகள், வந்த நோயாளிகளில் பாதிபேர் என் வயதுடைய நபர்கள்தான்.

ஆரோக்கியமாக வாழத்தான் உழைக்கிறோம் என்ற எண்ணத்தை மறந்து சரியான நேரத்தில் சாப்பிடாமல் வேலைசெய்பவர்கள்தான் அங்கு அதிகம்! நானும் அல்சர் பிரச்சினைக்காகதான் சென்றிருந்தேன்

செல்வத்தை சேமிப்பதற்காக ஆரோக்கியத்தை இழக்கிறோம், பிறகு ஆரோக்கியத்தை மீட்க செல்வத்தை அழிக்கிறோம்

பர்ஸ், வயிறு, வண்டி பெட்ரோல், மொபைல் பேலன்ஸ் இவை எல்லாம்  காலியானபின் நம்மிடம் எஞ்சி இருப்பது எதுவோ!அதுவே நிரந்தரம்!
அதுதான் நாம் செய்த தர்மமும், நமது 
ஆரோக்கியமும்! என்று என் அத்தா அடிக்கடி சொல்வார்

ஆம்! நாம் எதிர்காலத்தை மனதில் வைத்து நிகழ்காலத்தை வீணாக்குகிறோம், பிறகு எதிர்காலத்தில் நமது கடந்த காலத்தை நினைத்து வருந்துகிறோம்
மரணிக்கவே போவதில்லை என்பதுபோல் வாழுகிறோம், பிறகு வாழவே இல்லை என்பது போல் மரணித்து விடுகிறோம்

நமது வாழ்க்கை பயணம் மிக அழகானது அதை ரசித்து வாழ பழகுவோம்!

இம்தியாஸ் சவுக்கத் 













IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...